Saturday 29 September 2012

வாடாமல்லி




என்றோ, எங்கோ மலர்ந்த மலரை அன்று அவன் நுகரும் நாள், ஆம், அன்று அவனுக்குத் திருமணம். மணமாக இருந்த ஓர் மலர் அவனுடன் திருமணமாகவிருந்தது. கொய்த மலர் வாடும், அன்றோ, கொடுத்த செடிகள் வாடி நின்றன. மணமகளின் பெற்றோர்களின் முகத்தில் சோகம், எனினும், கன்னியாயிருந்த தங்கள் மகளை கறையேற்றிவிட்டோம் என்ற சந்தோஷம். உறவுகள் வந்து வாழ்த்தின. புரோகிதர்கள் புடைசூழ, மதத்தின் புனிதமாய் நினைத்த பல புராணங்களைப் படிக்க, இவளோ பூவாக அங்கு அமர்த்தப்பட்டிருந்தாள். வேள்வியில் எழும்பிய புகை, புரோகிதர்கள் மேலும் நெய் ஊற்ற ஊற்ற அதிகரித்தது. கண்களை கரிக்கச் செய்யும் அப்புகையில் மெய்யாய் அழுதுகொண்டிருந்தாள் அவள். கண்ணீருக்குக் காரணம் புகையே என மற்றவர் நினைக்க அது அவளுக்குச்  சாதகமாயிற்று.  உடைந்த மணதுடன், விலை உயர்ந்த  உடையுடன் அவள் அமர்ந்திருந்தாள். உடைந்த அவளது உள்ளத்தின் அங்கலாய்ப்பினை வீட்டுக்கும், ஊருக்கும் தெரியாதபடி புதைத்து வைத்திருந்தாள். தனது மன விருப்பத்தை வெளியிலே சொல்லாமல், விடையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். போதும் என்ற அளவிற்கு புகையும், புராணமும் முடிந்த பின்னர், மணவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவளுக்குள்ளே உண்டானது மயான அமைதி. பெற்றோரை மிஞ்சி பேசியவள் அல்ல, ஆனால் பெற்றவர் தருவது நஞ்சாக இருக்குமோ என்ற பீதி அவளுக்குள். ஆம், எதற்காக தான் அடிக்கடி பெற்றோரால் கட்டுப்படுத்தப்பட்டாளோ, அப்படிப்பட்ட தோழிகளோடே சுதந்திரமாய் சுற்றித் திரிய மறுக்கப்பட்டாளோ, கட்டும் நபரும் பெற்றோரைப் போலவே இருப்பாரோ! என்ற கேள்வி.
 
மேடையில், பலர் வந்து பரிசளித்து, புகைப்படம் எடுத்து விடைபெற்றுச் சென்றுகொண்டிருந்தார்கள், இவளோ அவனுடனேயே நின்றுகொண்டிருந்தாள், ஆம், அதுதானே நியதி. படித்திருந்தாலும், பதவியிலிருந்தாலும், பயத்தின் ஊடே சிந்தித்துத்தான் சிரித்துக்கொண்டிருந்தாள். உடன்கட்டை (உடன் கணவன்) ஏறிவிட்டோம், இனி என்ன வந்தாலும் பார்த்துக்கொள்வோம் என தன்னைத் தானே அமைதிப்படுத்தியும் இயலாதுபோன நேரம் அது. திருமணம் முடிந்ததும், மணவறையின் அலங்காரங்களை சிறார்கள் பிய்த்தெறிந்துகொண்டிருந்தனர், ஆம், அவைகள் இனி தேவை அற்றவையே. அடுத்து களையப்படுவது இவளது அலங்காரமே! திருமணத்தன்று காலையில் வந்த கூட்டம் மாலையில் விடைபெற்றது, கழுத்தில் கிடந்த மாலைகளும் கழற்றப்பட்டன, அதற்கு முன்பே மாலையில் இருந்த பல மலர்கள் அவளுக்குத் தெரியாமல் மாலையிலிருந்து விடைபெற்றிருந்தன. கொண்டையில் சூடியிருந்த பூங்கொத்தினை பறித்து எடுத்தபோது அது வாடியிருந்ததையும், நசுங்கியிருந்ததையும் கண்டு கடவுளே எனது வாழ்வு இப்படி ஆகிவிடக்கூடாது என வேண்டிக்கொண்டாள். உறவினர் விடைகொடுத்தபின், பெற்றோரைப் பிரியும் வேளை. அப்போது, இரவு இரண்டு மணி தூரத்திலேயே நின்றுகொண்டிருந்தது.
 
பகலுக்கு விடைகொடுத்து, படுக்கை அறைக்குள் நுழைந்தபோது பதபதைத்தது அவள் மனது. ஒருமுறை கூட அவனிடம் பேச பெற்றோர் வழி தர வில்லையே என்ற எண்ணத்தில், அவளது உதடுகள் அதுவரை மூடியேகிடந்தன. மௌனமும், அவன் எதைச் சொன்னாலும் செய்வதும்தான் அவனுக்கு அவள் அப்பொழுது அளித்த பதில். இரவுக்குத்தான் அவன் முன்னுரிமை கொடுக்கிறானோ! என்ற எண்ண ஓட்டத்தில் அவனைக் கணித்துக்கொண்டிருந்தாள். தன்னையும், அவனையும் அறிய அதற்கு முன் எனக்கு ஒரு தருணம் கிடைக்குமா? அறிமுகத்திற்கு முதலிடம் கொடாமல், அதற்கு முதலிடம் கொடுத்தால், அவனுக்கு நானல்ல, அதுவே முதல் என்ற தீர்மானத்தோடு நின்றுகொண்டிருந்த அவளை அழைத்தான் கணவனட. எல்லையைத் தொட்டுவிட்டோம், இனி எதைத் தொட்டால் என்ன? என்ற தைரியம் ஒரு புறம் இருந்தாலும், மொட்டாய் வீட்டில் இருந்த ஞாபகம், காலம் தன்னை மலரச் செய்ததின் கனவு, கல்லூரி மாணவிகளுடன் உலாவந்த உற்சாகம் எல்லாம் அப்போது நினைவில் வந்தது.
 
அவளது, தோழியின் வாழ்க்கையினை நினைத்த அவள், தனது வாழ்க்கையிலும் தோல்வியின் களை முளைத்துவிடுமோ! என்று பயந்துகொண்டிருந்தாள். அவளது தோழி காதலித்து மணமுடித்தவள், பெற்றோரை மதியாமல் கழற்றிவிட்டு காதலித்தவனையே கடவுளாக நினைத்து ஓடிச் சென்றவள். திருமண உறவு தொடங்கிய பின்னர், மோசமான குணம் கொண்ட கணவனைக் கண்டதிர்ந்து, தன் உயிரை மாய்க்க நினைத்தவள். அப்போதெல்லாம், அவளைத் தொடர்பு கொண்டு மனக் காயம் ஆற்றிக் காப்பாற்றியவள் இவள். இன்றோ, தோழிக்கு முன் எனது வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறதோ? என நினைத்து நினைத்து குழம்பியிருந்தாள். பலமுறை தோழியின் தோல்வி வாழ்க்கையைக் இவளது வார்த்தைகள் காப்பாற்றியது, அப்போது இவள் திருமணம் ஆகாத கன்னி.
 
'ஏண்டி கவலப்படுற? நாங்கல்லாம் என்ன செத்தா போயிட்டோம், வர்ரது வரட்டும் பாத்துக்கலாண்டி, நீ ஏன் சாகணும்' என்று தோல்வியின் சோகம் தணிய தோழியிடம் தான் பேசிய வீர வசனங்கள் இவள் நினைவுக்கு வந்தது. 'உனது திருமணத்திற்கு என்னால வரமுடியலடி' என்று தோழி சொன்னபோது, 'என்னடீ ஒன்னோட ஆத்துக்காரரு, தோழியான எனது கலியாணத்துக்குக் கூட வரவிடமாட்டிங்காரா?' எனக் கேட்டாள். தோழியோ, 'என்னத்தடி சொல்ல, அவரோட வாழவிடுறாரேன்னே நான் சந்தோஷப்படுறேன், இதுலவேர ஓன்னோட கலியாணத்துக்கு வரவிடலங்கிற வருத்தத்த கூட்டிக்கிட்டேன் அவ்வளவுதான்.' 'பெத்த புள்ள முன்ன இருக்கயில கூட செத்துப்போன்னு பேசுறாரே, இவரு கொடுத்த லவ் லட்டர அன்னிக்கு முத்திக்கிட்டேன்டீ, இன்னைக்கு மொத்துரான். காவாலிப் பசங்களை எல்லாம் கல்லூரியில சேத்ததால, கன்னி நம்மதாண்டி பாழாயிட்டோம.;' ஊட்டுக்குள்ள அவரு நுழையச்சுல எல்லாம் என் மனசு 'வாடா...மல்லி' (வாடா கொத்தமல்லியைப் போன்ற சின்னப் புத்தியுள்ளவனே) என்னுதான் சொல்லுது, 'என்னன்னாலும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு கடமையைச் செய்யுரேன்டீ என்ன செய்ய'. 'அவரு புல்லாக குடித்துவரும்போது கடமையைச் செய்ய கஷ்டமாயிருக்கு, அப்பந்தான் செத்துடுவோம்னு தோணும்' என தான் செய்த தவறுக்காக, அநீதி இழைத்தது உலகமே என விட்டுக்கொடுக்காமல் பேசிக்கொண்டாள். 'வூட்ட உட்டு ஓடிவந்துட்டபின்னால நான் இவரோட பட்ட பாட்ட, தனியா பாடுர பாட்ட கடவுள் மட்டுந்தான்டி கேக்கமுடியும், அதுவும், கடவுள் கேட்கிறாரா இல்லையாங்கிற சந்தேந்தான்டி. கோயில்ல மணி அடிச்சாலும் நம்ம காதுல நல்லா கேக்குது, ஆனா கடவுளுக்கு கேட்குதோ இல்லையோ... போதும்' என்று அலுத்துக்கொண்டாள் அவள். என்னமோ, ஏதோ ஒன்னோட வாழ்க்க என்னோடதப்போலாவக் கூடாது, நீ நல்லா இருக்கணும்டீ, எல்லாருக்கு நல்லது செய்ஞ்ச, அறிவுர சொன்ன, நீ சொன்னவரத்தான் என்னால ஏத்துக்க முடியல, அவர ஏத்துக்கிட்டிருந்தா இப்படி நடந்திருக்காதோன்னு சில நேரம் நினைப்பேன், இனிம நினைச்சி என்னடி செய்ய? எனது வழியிலேயேதான் போறேன், வலி என்னைக்கு மாறுமோ!!! என உளத்திப் பேசின தோழியை மீண்டும் உறுதிப்படுத்தியவள் இவள்.
 
இரவில் இவளை கணவன் அழைத்தபோது, அருகிலே வந்தாள். அமரச்சொன்னபோது மௌனித்தமர்ந்திருந்தாள், உள்ளத்திலோ அலறல் இருந்தது. மணமேடையில் எல்லாருக்கும் முன்னாக அமர்ந்திருந்தபோது சற்று இருந்த ஆனந்தம், இங்கு யாருமே இல்லாததால் அதுவும் அற்றுப்போயிருந்தது. கணவனது தொடக்க வார்த்தைகளைக் கேட்க இவளது காதுகள் துடித்துக்கொண்டிருந்தன. அறை வாசலும் யாருக்கும் வழிவிடாதபடி கதவினால் அடைக்கப்பட்டது. உள்ளே நுழைந்ததும், படுக்கை அறை ஒரு பூஜை அறையைப் போலவே காட்சியளித்தது. கடவுளின் கைகளில் இருவரையும் ஒப்புக்கொடுப்பது போன்ற பிரம்மையால், பெற்றோர்களால் உருவேற்றப்பட்ட கோலம் அது. எல்லையைத்தாண்டி பிள்ளைகளோடு தாங்கள் இருக்கமுடியாத இடத்தில், பெற்றோர்கள் தங்கள் கடவுள்களை இருத்தியிருந்தார்கள்.
 
இயேசுவை அறியாத குடும்பத்தில் விக்கிரகங்களை வணங்க பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு வளைக்கப்பட்ட அவன், அழையில் நுழைந்ததும் சற்றமர்ந்து, பின்னர் எழுந்து ஒரு பெரிய போர்வையினை கையிலெடுத்து அங்கிருந்த பூஜை பொருட்கள் அனைத்தின் மேலும் விரித்தான். இவளோ, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்கிறாரா, அல்லது தங்களைக் காணாக்கூடாதபடி அவைகளை மூடுகிறாரா என நினைத்து கணவனை நிதானித்துக்கொண்டிருந்தாள். திரும்பி வந்தமர்ந்து பேசிய அவன், 'டார்லிங், எனங்கு இதுல நம்பிக்க இல்ல, ஒரு காலத்துல இருந்திச்சி. ஆனால், நான் கல்லூரி படிக்கும்போது, உடன் படித்த மாணவன் ஒருவன் 'இயேசு' என்பவரை எனக்கு அறிவிக்க, தொடக்கத்தில் எதிர்த்த நான், பின்னர் சுவைத்து இயேசுவுக்கு என்னை அர்ப்பணித்துவிட்டேன், இன்று அவரது சொந்தப் பிள்ளை. இதனை என் பெற்றொருக்கு நான் இதுவரை அறிவிக்கவில்லை, மறைமுகமாக வாழ்ந்துவிட்டேன், மனைவி நீ, உன்னிடத்தில் இனி என்னால் மறைக்கமுடியாது, மறைத்து வாழ்வைத் தொடங்கமுடியாது, அது குடும்பத்தையே இடித்துவிடும், எனவே, முதலிலேயே உனக்கு தெரிவித்துவிட்டேன். திருமணத்திற்கு முன் உன்னோடு பேச நினைத்தேன், வழி கிடைக்கவில்லை, பெற்றோரும் வழி திறக்கவில்லை. இயேசுவை ஏற்றுக்கொண்ட பெண்தான் வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. ஆனாலும், அதனை பெற்றோரிடம் சொல்லாமல், அவரே அதைத் தரட்டும் என விட்டுவிட்டேன். திருமணம் பேசி முடிந்தபோது, இயேசுவை அறியாத ஒரு பெண்ணுடன் எனது வாழ்வு தொடங்கப்போகிறதே எனத் தடுமாறினேன், எனினும், உடன் அவர் இருப்பதால் உறுதியானேன். பெற்றோரிடம் சொல்லியிருக்கவேண்டும், நான் இயேசுவை ஏற்றுக்கொண்டதே தெரியாதே, இந்நிலையில் இதைத் தெரிவித்தால் என்னாகுமோ என இருந்துவிட்டேன். சொல்லாதது எனது தவறுதான் என சற்று தன்னைத்தான் நொந்துகொண்டு, நான் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்றவன். உன்னை நான் தவறாக நினைக்கமாட்டேன் வற்புறுத்தமாட்டேன், எனது வாழ்க்கையின் மூலமாக நீ இயேசுவைப் புரிந்துகொள்ளும்போது, உனக்கு மனம் வரும் அப்போது தெரிந்துகொள் என்ற பெருந்தன்மையாக, இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கான மறைமுகமான அழைப்பினை அவளுக்கு விடுத்தான்.
 
இவளுக்கோ, நிலவைத் தேனில் நனைத்துக்கொடுத்தது போன்ற உணர்வு, நிலை தடுமாறினாள், நடக்காது என நினைத்தேன் நடந்துவிட்டது, ஆம், திருமணம் பேசத் தொடங்கிய நாளிலிருந்து அவளது பயமும் அதுதான். இயேசுவை அறிந்த எனக்கு இயேசுவை அறிந்தவர் வேண்டும் என்று எண்ணித் தவித்து, சொல்லத் தைரியமில்லாதிருந்த அவளை, இயேசுவை அறிந்தவருடன் இறைவனே இணைத்ததை நினைத்து நினைத்து, ஆனந்தத்தில் அப்படியே மூர்ச்சித்துவிட்டாள்.
 
அவள்மூர்ச்சித்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற கணவனோ, திருமணம் ஆன அன்றிரவே இதனைச் சொன்னது தப்பாயிற்றோ? காலம் சென்று சொல்லியிருக்கலாமோ? பக்தியில் முத்தினவளாக இவள் இருந்திருப்பாளோ, எனது வார்த்தையினால் அவனது மனம் இடிந்துபோனதோ என நினைத்து, நீர் தெளித்து, பானம் கொடுத்துத் தேற்றி, பேசும் அளவிற்குத் தூக்கி அமர்த்தி, 'மன்னித்துவிடு, நான் சொன்னது உன்னை பாதித்துவிட்டது என நினைக்கிறேன்' என்றான்.
 
தன்னிலைக்கு வந்த அவள், நான் இயேசுவை சிறுவயதிலேயே ஏற்றுக்கொண்டேன், கல்லூரி நாட்களில் தோழிகளுக்கும் இயேசுவை அறிவித்துவந்தேன். 'வீட்ல சொல்லிப்புடுவோம்' என என்னோட தோழிங்க பயமுறுத்துவாங்க. கட்டுப்பாடான வீட்டுக்குத் தெரியாமல் கர்த்தரைத் தொழுதவள் நான். அடுத்த தெருவுல இருக்கிற அக்காதான் என்னோட ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அஸ்தியாரம் போட்டவர்கள், ஊழியர் ஒருவரிடம் ஞானஸ்நானம் பெற்றேன், அப்போது நானும் அந்த அக்காவும் மட்டுமே சென்றிருந்தோம். வாழப்போகும் கணவன் இயேசுவை அறிந்தவனாயிருக்கவேண்டும், இல்லையேல் எனது வாழ்க்கையே முறிந்து விழும் என்பதை சொல்லக்கூடாத அளவிற்கு ஊமையாக்கியிருந்தது எனது வீட்டின் பக்தி வைராக்கியமும், பயமும் என்றாள். பெற்றவர்கள் செய்யாததை சிலுவையில் பெற்ற அவர் செய்துவிட்டார் என்ற மகிழ்ச்சியின் நிகழ்ச்சிதான் நான் மூர்ச்சித்தது என்றாள். கணவன், தனது தனது பெட்டியிலிருந்த வேதாகமம் ஒன்றை வெளியே எடுத்துக் காட்ட, குடும்பம் இயேசுவின் குடும்பமானது. இருவரும் இணைந்து அந்த வேதாகமத்தில் கையொப்பமிட, அவர்களது திருமணம் பரத்தில் பதிவானது. இரவில் இருவரும் இயேசுவைத் தொழுதார்கள். சுதந்தரமற்றுக் கிடந்த இவர்களுக்கு குடும்பமே சுதந்தரமானது, அது இயேசுவுக்குச் சொந்தமானது. அந்த குடும்பம் ஓர் 'வாடாமல்லி'. ஏமாந்தது போன்ற உணர்வு இருவரின் பெற்றோருக்கும் வராதிருக்க, 'நீங்களும் அவரை அறிந்துகொள்ளுங்கள்' என அழைத்தது இவர்களது வாழ்க்கை, வாழ்க வளமுடன்.
 
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை,
உன்னைக் கைவிடுவதுமில்லை - பைபிள் (யோசுவா 1:5)
 
மலரே நீ எங்கே இருந்தாலும்,
மாலை தொடுப்பவர் அவர்தான்
 







No comments:

Post a Comment